05/01/2026 | Press release | Distributed by Public on 05/01/2026 02:42
உலகச் சூழல் மேலும் சவால் மிக்கதாகவும், எளிதில் கணிக்க முடியாத ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது. நெருக்கடிகளும் இடர்ப்பாடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.
சென்ற ஆண்டு, வர்த்தகப் பூசல்களும் வரிகளும் அதிகரித்தன. உலகம் அதன் பொருட்டு ஆயத்தமானது. இருப்பினும், சிங்கப்பூர் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக செய்தது.
இது தற்செயல் அன்று. நாம் அனைவரும் - ஊழியர்களும் தொழிற்சங்கங்களும், முதலாளிகளும் தொழில்களும், அரசியல் தலைமைத்துவமும் அரசாங்கமும் - ஒன்றிணைந்து பாடுபட்டோம். மாற்றங்களை முன்னிறுத்தும் வகையில் நாம் தகவமைத்துக்கொள்ளவும் மறுசீரமைத்துக்கொள்ளவும் ஒன்றிணைந்து செயல்பட்டோம். அதுவே காரணம்.
அதனால், நம் நிறுவனங்கள் தொடர்ந்து போட்டித்தன்மையுடன் விளங்கின; நம் ஊழியர்கள் தொடர்ந்து நிகர வருமான வளர்ச்சியைக் கண்டனர்.
வரிகளின் படையெடுப்பு ஓய்ந்த பாடில்லை. தன்னைப்பேணிக்கொள்கைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
ஆனால், இப்போது, புதிய பிரச்சினை தோன்றியுள்ளது. மத்திய கிழக்குப் பூசல், எரிசக்தி வளங்களை இடைமறித்து, அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயரச் செய்துள்ளது.
இந்தச் சிரமமான காலத்தைக் கடக்க நாம், தீர்க்கமான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
நாம் நம்முடைய எரிசக்தி மீள்திறனை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறோம் - வளங்களைப் பல்வகைப்படுத்துகிறோம்; இருப்புகளை அதிகரிக்கிறோம்; முக்கியமான விநியோகத் தொடர்களைத் தொடர்ந்து பாதுகாப்பாக வைத்திருக்க, நம்பகமான பங்காளிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருகின்றோம்.
அதேவேளையில், நாம் தொழில்களுக்கும் ஊழியர்களுக்கும் ஏற்படும் பாதி்ப்பைத் தணிக்க ஆவன செய்து வருகிறோம். அதன்படி, நாங்கள் $1 பில்லியன் ஆதரவுத் தொகுப்புத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம் - நிறுவனங்கள் உடனடியாக அதிகரித்துவரும் செலவுகளைச் சமாளிக்க உதவுகிறோம்; இணையவழி ஊழியர்களுக்கும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் நேரடி ஆதரவு வழங்குகிறோம்; குடும்பங்களுக்குக் கூடுதல் உதவி அளிக்கிறோம்.
நிலைமை எப்படி மாறும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், கடந்தகால நெருக்கடிகளைக் கையாண்ட நமது அனுபவம், நமக்கு நம்பிக்கை அளித்துள்ளது. நாங்கள் விழித்திருப்போம்; காலம் தாழ்த்தாமல் செயல்படுவோம்; சிங்கப்பூரர்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வோம்.
நாம் இந்த உடனடி நெருக்கடிகளைச் சமாளிக்கும் வேளையிலும்கூட, வரவிருக்கும் பேரளவிலான மாற்றங்களை நாம் புறக்கணித்தல் கூடாது. செயற்கை நுண்ணறிவும் புதிய தொழில்நுட்பங்களும் நமது வாழ்க்கையையும் வேலையையும் வெகுவாக மாற்றியமைக்கும்.
சிங்கப்பூரர்கள் இந்த மாற்றங்களை வெறுமனே எதிர்கொள்வது மட்டுமல்லாமல், அவற்றை மிஞ்சும் அளவிற்கு, வாய்ப்புகளை அதிகளவு பயன்படுத்திப் பலனடையவேண்டும். அதனால்தான், முன்னணி நிறுவனங்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவுத் திறனாற்றல்களை இங்கு மேம்படுத்திக்கொள்ள, நாம் அவற்றை ஈர்த்து வருகின்றோம். அதன்மூலம், நம் உள்நாட்டுத் தொழில்களும் இத்தகைய வளங்களைப் பயன்படுத்தி, வளர்ச்சியும் உருமாற்றமும் காணமுடியும். நம்மைப் போன்ற சிறியதொரு நாடு தன்னிலை காக்கவும், தொடர்ந்து ஏற்புடைத்தன்மையுடன் திகழவும், விரைவாக மாறிவரும் உலகில் மதிக்கத்தக்க வகையில் பங்களிக்கவும், இதுவே வழி.
இந்த வாய்ப்புகளில் சவால்கள் இல்லாமல் இல்லை. சிங்கப்பூரர்கள் பலருக்கும் உள்ள அக்கறைகளை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது - வேலைப் பாதுகாப்பு பற்றி; உங்களாலும் உங்கள் பிள்ளைகளாலும் மாற்றத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியுமா என்பது பற்றி.
நான் இவற்றையெல்லாம் அறிவேன். இந்த மாற்றம் தடையின்றி நிகழாது. சில தொழில்கள் இடையூறுகளைச் சந்திக்கும். சில வேலைகள் மாறும். சில பணிகள் இல்லாமல் போய்விடும்.
ஆனால், நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்: சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும்போது, ஊழியர்கள் தொடர்ந்து பயனடைவதை அரசாங்கம் உறுதிசெய்யும். நம்மால் எல்லா வேலைகளையும் பாதுகாக்க முடியாவிட்டாலும், நாம் ஒவ்வோர் ஊழியரையும் சிங்கப்பூரரையும் வயது பாராமல் பாதுகாப்போம் - நீங்கள் உங்களைத் தகவமைத்துக்கொண்டு, மறுதிறன் பெற்று, புதிய வேலைகளையும் வாய்ப்புகளையும் அடைய உதவுவோம்.
அதேவேளையில், நாம் இந்த நிச்சயமற்ற சூழலால் பின்வாங்கக் கூடாது - இல்லையென்றால் நாம் பின்தங்கிவிடுவோம். இனிவரும் காலம், செயற்கை நுண்ணறிவின் காலம். நாம் அதனை ஒருபோதும் புறக்கணித்தல் இயலாது. மாறாக, நாம் அதனை நம்பிக்கையுடனும் உறுதியான நோக்கத்துடனும் எதிர்கொள்ளவேண்டும்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் போட்டித்திறத்துடன் செழித்து வளரும். செயற்கை நுண்ணறிவுத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் ஊழியர்கள் மேம்பட்ட வாய்ப்புகளையும் வாழ்க்கைத்தொழிலையும் பெற்றிருப்பர்.
அரசாங்கம் தொடர்ந்து ஆதரவை வலுப்படுத்தும் - ஊழியர்கள் தங்களை நம்பிக்கையுடன் மேம்படுத்திக்கொள்ள, திறன் பயிற்சி - வேலை இணைப்பு ஆகியவற்றை மேலும் ஒருங்கிணைக்கும்; ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும். ஆனால், நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் முயற்சி செய்யவேண்டும். இந்தப் புதிய பொருளாதாரத்தில், ஏற்புடைத்தன்மையானது, விருப்புரிமை அல்ல; அத்தியாவசியம்.
இறுதியில், எனக்கு நம்பிக்கையளிப்பது நம் தொழிலாளர் இயக்கமும் முத்தரப்புப் பங்காளித்துவமுமே ஆகும். கடந்த 65 ஆண்டுகளாக, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸும் தொழிற்சங்கங்களும் ஒவ்வொரு பெருமாற்றத்தின்போதும், ஊழியர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து செயல்பட்டுள்ளன. நமது முத்தரப்பு அணுகுமுறை - தொழிற்சங்கங்கள், முதலாளிகள், அரசாங்கம் இணைந்து பணியாற்றுதல் - எப்போதுமே நம்முடைய மிகப் பெரிய பலங்களில் ஒன்றாக விளங்கியுள்ளது - இன்றளவிலும்கூட.
சிங்கப்பூர் சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது. சிரமமான தருணங்களில், நம்முடைய மீள்திறன், தகவமைப்பாற்றல், ஒருவருக்கொருவர் கொண்டுள்ள கடப்பாடு ஆகியவையே நமது அடையாளம். ஆக, நாம் மேலும் நிச்சயமற்ற உலகைக் கடக்கும் வேளையில், உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருந்து, தொடர்ந்து முன்னேறிச் செல்லவேண்டும்.
நம் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி! சவால்கள் எதுவாயினும், சிங்கப்பூரைத் தொடர்ந்து முன்னேற்றிச் செல்லும் உங்கள் கடின உழைப்பு, மனவுறுதி ஆகியவற்றுக்கு நன்றி! இந்த மே தினத்தில், உங்கள் பங்களிப்புகளைக் கெளரவிக்கிறோம்; எங்கள் கடப்பாட்டைப் புதுப்பிக்கிறோம் - உங்களுக்கு ஆதரவளிப்போம்; உங்களைக் கைதூக்கிவிடுவோம்; ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றி பெறுவதற்குரிய நியாயமான வாய்ப்பைப் பெற உறுதிசெய்வோம்.
ஒன்றிணைந்து, மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை எல்லோருக்கும் உறுதிப்படுத்துவோம். இனிய மே தின வாழ்த்துகள்!